ஆரோக்கியமான எதிர்காலம் பெற, இயற்கை, கரிம மற்றும் சத்தான உணவை நோக்கி இந்தியா செல்ல வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று அவுட்லுக் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, அவுட்லுக் போஷான் விருதுகள் 2019-ஐ வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர் தெரிவிக்கையில்., "கிராமங்கள் மற்றும் ஊரகக் குடியிருப்புகளில் வீடுவீடாக சென்று, ஊட்டச்சத்து பற்றிய ஆலோசனைகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடியவர்கள் தலைவர்களாகத் திகழ வேண்டும். தூய்மை இந்தியா இயக்கம் போன்று, ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க தேசிய அளவிலான இயக்கம் ஒன்று தொடங்கப்பட வேண்டும்.
ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த, தற்போதைய சமுதாயத்தின் வலிமை மிக்க தொடர்பு சாதனமாகத் திகழும் ஊடகங்கள் மற்றும் திரையுலகினர் முன்வர வேண்டும். ஊட்டச்சத்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு, அரசாங்கத்திற்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் உண்டு. மக்களின் மனோபாவம் மற்றும் சிந்தனையை மாற்ற வேண்டியது அவசியம்.
மேலும், பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பிற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தனி இயக்கம் தேவை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமை பெற்ற புதிய தலைமுறை குடிமக்களை உருவாக்க ஏதுவாக, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 65% பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதன் மூலம், நம் நாடு இளைய தலைமுறை நாடாகத் திகழ்கிறது. உலக நாடுகளில் இந்தியா விரைவான வளர்ச்சியையும், உரிய இடத்தையும் பெறுவதற்கு, இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயர்ந்த அறிவாற்றல் திறனுக்கு ஊட்டச்சத்து மிகவும் தேவை.
நாட்டில் பெண் ஊட்டச்சத்து பிரச்சாரகர்கள் அல்லது குடியிருப்பு அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களை உருவாக்குதன் மூலம், ஊட்டச்சத்து புரட்சியை ஏற்படுத்த வேண்டும்'' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் அடிப்படை கலாச்சாரத்தில் விவசாயம் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், ஊட்டச்சத்து உணர்திறன் மிக்கதாக இந்தத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இயற்கையும் கலாச்சாரமும் எப்போதும் சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஆரோக்கியமான, பணக்கார மற்றும் மகிழ்ச்சியான தேசமாக மாற ஒரு அற்புதமான பங்களிப்பை வழங்குவதற்காக உழைக்கும் அனைவரையும் தான் பாராட்ட விரும்புவதாக தெரிவித்து தனது உரையினை முடித்தார்.