ஆன்மிகம் என்பது அனைவராலும் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு சொல்லாக இருக்கிறது. ஆன்மீக வழியை பின்பற்றுபவர்களின் கருத்தும், அதனை எதிர்ப்பவர்களின் கருத்தும் எப்போதும் ஒன்றுக்கொன்று முரணாக தோன்றும்.
ஆன்மாவுடன் தொடர்புடைய விஷயங்களைக் குறிப்பது ஆன்மவியல் (spirituality). ஆன்மிகத்தினைப் பின்பற்றுவது என்பது சரியா தவறா என்ற கேள்விகளுக்கு அப்பால் இதில் ஒரு மனோதத்துவம் இருக்கிறது. மனித மூளைக்கும், மனதுக்கும் எட்டாத பல விஷயங்கள் இருப்பதை அனைவருமே உணர்கிறோம்.
அதை இயற்கை என்று பொதுவாக சொல்கிறோம். உலகில் உள்ள எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் போது தான் அவை அனைவராலும் அங்கீகரிக்கப்படுகின்றன.
அங்கீகாரம் பெற்ற பிறகு தான் அதற்கென ஒரு தனி இடம் கிடைக்கிறது. இது பொருட்களுக்கு சரியானதாக இருக்கலாம். மனித மனம் என்பது எந்தவொரு கட்டுக்குள்ளும் அடங்காதது. இந்த ஒரு புள்ளியை வைத்து தான் ஆன்மீகத்தை பின்பற்றுபவர்களுக்கும், அதனை விமர்சிப்பவர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடும் மோதல்களும் மூள்கின்றன.
ஆன்மீகம் என்பது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள், மனிதர்களைப் பொருள் சார்ந்த, உயிரியலோடு தொடர்புடைய ஒரு உயிரினமாக மட்டும் கருதுவதில்லை. பொருட்களையே சார்ந்து வாழும் உலகத்தையும், காலத்தையும் உடலின் புலன்களையும் கடந்ததாகவும் கருதுகின்றன.
ஆன்மிகம் என்பது, உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிப்பாக குறிக்கிறது. மனம் வேறு, உடல் வேறு என்ற இருமைத்தன்மையை உணர்த்துகிறது ஆன்மிகம். அதனால் தான், பொருள் சார்ந்த உலகியல் விஷயங்களுடன் ஆன்மீகம் முரண்படுகிறது. மனம் கடந்த நிலையை உணர்த்துவது ஆன்மிகம்.
ஆன்மீகம்-நாத்தீகம் இரண்டும் இரு துருவங்களாக இருந்தபோதிலும், அவை இரண்டுமே ஒரு மனிதனின் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி, அழிந்து, மறுஉரு பெற்று காலத்தின் போக்குக்கு ஏற்ப தனது தாக்கத்தையும் மாற்றிக் கொள்கிறது.
ஆன்மீகத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஒரே கோட்பாட்டை பின்பற்றுவார்களா என்றால் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மதங்கள் ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும், அது இடம், பொருள், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது.
ஒரு விஷயத்தில் திருப்தி ஏற்படாத போது மற்றொரு விஷயத்திற்கு மாறுவதைப் போல, ஆன்மீகத் தேடலானது தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக புத்தரைச் சொல்லலாம்.
தனது வாழ்க்கையைப் பற்றி யோசித்த ஒரு இளவரசன், துறவியான தேடல் பயணமாய் புத்தரின் வாழ்க்கைத் தொடர்ந்தது. அவரது தேடலின் நீட்சியாய் உருவானது புத்த மதம்.
ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டதாக மதம் இருந்தாலும், அது இடம், பொருள், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வழி என்று கூறப்படுகிறது.
நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மதம் ஊடுருவி இருக்க வேண்டும். ஆனால் இங்கே மதம் என்பதை குறுகியவாதமாக பார்க்கப்படக்கூடாது, முறைபடுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள். மதம் என்பது, இந்து, இஸ்லாம், கிறித்தவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது என்று நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னார்.
ஒரு இடத்தில் கூடும் பல சாலைகள் போலவே மதங்கள் இருக்கின்றன. நாம் ஒரே முடிவை நோக்கி பயணிக்கிறோம் என்ற நிலையில், எந்த சாலையில் செல்கிறோம் என்பது முக்கியம் இல்லை. அவரவர் வழி அவருக்கு, ஆனால் இலக்கு என்னவோ ஒன்றுதானே? இதில் சண்டையிட வேண்டிய அவசியம் என்ன? என்று மகாத்மா கேள்வி எழுப்பினார்.
ஆனால், ஜவஹர்லால் நேருவோ, மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர் என்று நம்பினார். மதம் மக்களுக்கு அபின் போன்ற போதைப் பொருள் என்று காரல் மார்க்ஸ் கூறினார். இப்படி மதம் என்பதற்கான விளக்கங்களும், வாதங்களும் அதற்கான எதிர்வாதங்களும் எண்ணிலடங்காமல் நீள்கின்றன.
ஆனால் ஆன்மாவிற்கான தேடல் என்பது வெளிப்புறத் தேடல் அல்ல, அது உடலுக்குள், மனதிற்குள் தேட வேண்டியது என்பதை புரிந்துக் கொண்டால் என்றும் நிம்மதியே. ஆன்மாவைத் தேடியவர்களில் இயேசு, நபிகள் நாயகம், சங்கராச்சாரியார், புத்தர் என உலகம் முழுவதும் பல்வேறு மகான்கள் இருக்கின்றனர். ஒரு சில மதங்களும், சமயங்களும் ஓரிறை கோட்பாடுகள் கொண்டவையாக இருந்தால், வேறுசில பல இறை தத்துவத்தை முன் வைக்கின்றன.
இந்தியாவில் பல்வேறு சமயங்களும், மதங்களும் பின்பற்றப்படுகின்றன. சீக்கியம், கிறித்துவம், இஸ்லாமியம், இந்து மதம் என அனைத்து மதங்களும், சிலரின் ஆன்மீகத் தேடல்களின் விளைவு என்றால், அதை சரி என ஏற்றுக் கொண்டு லட்சக்கணக்கானோர் அவற்றை பின்பற்றுகின்றனர். அதனால் தான் கடவுளின் மைந்தன், இறைதூதன், குரு என்று ஆன்மாவைத் தேடியவர்களை கூறுகிறோம்.
உளவியல், வரலாறு, கலாசாரம் என எந்த கோணத்தில் பார்த்தாலும் மதம் என்ற அமைப்பு முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை. அன்பு, அச்சம் உணர்ச்சிகள் என்ற அடிப்படையில் மதம் என்பது நீடித்து நிலைத்திருக்கும்.
புத்தர் தனது தேடலில் தனக்குத் தேவையானதை பற்றிக் கொண்டார். அவரை பின்தொடர்ந்தவர்கள் அனைவருக்கும் அவருக்கு கிடைத்த அனுபவமே கிடைத்திருக்குமா? விடை தெரியாத வினாக்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. ஒருவேளை விடை தெரியாத வினாக்களுக்கான பதிலை நோக்கியப் பயணம் தான் ஆன்மீகமோ?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR