NEP 2020: தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்புகளுக்கான பணிக்குழுவை அமைத்தது மத்திய அரசு

இன்றைய சந்திப்பு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடரலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கிய ஒரு படியாகும் என்று போக்ரியால் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2020, 08:19 PM IST
  • தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி வழங்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று நடந்தது.
  • மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இதற்கு தலைமை வகித்தார்.
  • கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
NEP 2020: தாய் மொழியில் தொழில்நுட்ப படிப்புகளுக்கான பணிக்குழுவை அமைத்தது மத்திய அரசு title=

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் புதன்கிழமை (டிசம்பர் 2) தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான செயல்முறையை உருவாக்குவதற்கான பணிக்குழுவை அமைத்தார். உயர்கல்வி செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட பணிக்குழு, பல்வேறு தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்று ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி வழங்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் கல்வி அமைச்சரால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி செயலாளர், அமித் கரே, ஐ.ஐ.டி இயக்குநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய கல்வி கொள்கையான NEP-2020 ஐ அமல்படுத்துவது குறித்து விவாதிப்பது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பு, மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்முறை படிப்புகளைத் தொடரலாம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தொலைநோக்குப் பார்வையை அடைவதை நோக்கிய ஒரு படியாகும் என்று போக்ரியால் கூறினார்.

ALSO READ: IIT, NIT-களில் அடுத்த ஆண்டு முதல் தாய் மொழியில் பொறியியல் படிப்புகள்

"எந்தவொரு மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது. ஆனால் ஆங்கில மொழியில் அதிகம் புலமை இல்லாததால், அறிவார்ந்த மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியை பெற இயலாத நிலையை மாற்ற தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

புதிய கல்வி கொள்கை -2020 ஐ திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஆகியவை அடுத்த கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்கத் தொடங்கும் என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தனர்.

"தாய் மொழியில் தொழில்நுட்பக் கல்வியை, குறிப்பாக பொறியியல் கல்வியைத் தொடங்குவதற்கான ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இது அடுத்த கல்வியாண்டிலிருந்து துவங்கும். அதற்காக ஒரு சில IIT மற்றும் NIT-க்கள் பட்டியலிடப்படுகின்றன" என்று அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ: திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்

2021 முதல் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, ஒன்பது பிராந்திய மொழிகளில் JEE Main தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் NTA அறிவித்திருந்தது.

இருப்பினும், JEE Advanced தேர்வு பிராந்திய மொழியில் நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News