பெங்களூரு: பொறியியல், டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புகள் அனைத்தும் நவம்பர் 17 முதல் கர்நாடகாவில் மீண்டும் திறக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை முதல்வர் பி.எஸ் எடியூரப்பா (B.S. Yediyurappa) தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகாவில் (Karnataka) நவம்பர் 17 முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என கர்நாடகா அரசு கூறியுள்ளது. ஆனால் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் முடிவெடுக்கலாம் என்றும், கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும் என்று துணை முதல்வரும் உயர்கல்வி துறை அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயண் கூறினார்.
“நவம்பர் 17 முதல் பொறியியல், பட்ட படிப்பு மற்றும் டிப்ளோமா கல்லூரிகளுக்கான ஆஃப்லைன் வகுப்புகளை மீண்டும் திறந்து நடத்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும், மாணவர்கள். தங்கள் விருப்பப்படி, ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் வகுப்புகளை தேர்தெடுத்துக் கொள்ளலாம். ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர், அதாவது கல்லூரிக்கு வர விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்,” என்று துணை முதல்வரும் உயர் கல்வி அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயண் தெரிவித்தார். ப்ராக்டிகல் வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
கல்லூரிகளிலும் விடுதிகளிலும் தேவையான அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும், என்றார். விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த பனிக்குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகளும் செய்யப்படும். இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஏற்கனவே கூட்டங்களை நடத்தி ஆலோசனை செய்துள்ளோம். நவம்பர் முதல் ஆஃப்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கலாம் என்றும் யுஜிசி கூறியுள்ளது, ”என்றார்.
பிற கல்வி நிறுவனங்களைத் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடகா கல்வித் துறை அமைச்சர் கூறினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR