70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி -ராஜுவ்குமார்!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் தவித்து வருவதாக நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜுவ்குமார் தெரிவித்துள்ளார். 

Last Updated : Aug 23, 2019, 02:38 PM IST
70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி -ராஜுவ்குமார்! title=

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய பொருளாதாரம் நிதி நெருக்கடியில் தவித்து வருவதாக நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜுவ்குமார் தெரிவித்துள்ளார். 

இந்திய பொருளாதாரம் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், இதனை சரிசெய்ய சாதாரன நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை தடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி ஏற்பட யாரும் யாரையும் நம்பும் நிலையில் இல்லை என்று தெரிவித்த அவர், கடந்த 70 ஆண்டுகளில் இது போன்ற நிதி நெருக்கடியை இந்தியா சந்தித்தது இல்லை என்றும், ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையினருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களையும், பிரச்சனைகளையும் தீர்க்க மத்திய அரசு ஏதேனும் செய்தாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்டோமொபைல் தொழிலில் வாகனங்கள் விற்பனை குறைவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் தேக்க நிலை போன்றவை பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தியாவின் பல துறைகளில் உற்பத்தி குறைந்து வருகிறது. 

அடுத்த ஓராண்டுக்கு பின்னர் இந்த நிலை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படும், இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகும். பல துறைகளில் ஆட்குறைப்பு என்பது, உற்பத்தி, வங்கி நிதி உட்பட எல்லாவற்றையும் பாதிக்க செய்யும். இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நலிவு நிலை, கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பொருளாதார மந்தநிலை கவலை அளிப்பதாகவும், புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

2008-ஆம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணித்து கூற முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சினைகளை களைந்தாலும், புதிய பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News