அட்சய திருதியை! தங்கம் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு!!

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நகைக்கடைகளில் புதன்கிழமை பெண்கள் கூட்டம் அலை மோதியது.

Last Updated : Apr 19, 2018, 07:20 AM IST
அட்சய திருதியை! தங்கம் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு!! title=

தமிழகத்தில் கடந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனையை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை நன்னாளில் மக்கள் அனைவரும் தங்கம் வாங்க, தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்த நாளில் தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை!

அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.

இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.

சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அட்சய திருதியையில் தங்கம் வாங்க பெண்கள் காலை 6 மணி முதலே படையெடுக்கத் தொடங்கினர். 

சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வடபழனி, குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காலை 6 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போதே மக்களும் நகை வாங்குவதற்காக கடைகளுக்குச் சென்றனர். பல நகைக்கடைகளின் உள்ளே இடம் இல்லாததால், மக்கள் வெளியே அமர வைக்கப்பட்டனர். 

உள்ளே சென்றவர்கள் நகை வாங்கிவிட்டு வெளியே வந்ததும், காத்திருந்தோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நகைக்கடைகளில் உள்ள வாகன நிறுத்தமும் நிரம்பி வழிந்தது. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். 
 
அட்சய திருதியை நாளன்று சிறிதளவு தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஐதீகத்தால், அதிகமானோர் சிறிய கம்மல், மோதிரம், தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றையே வாங்கிச் சென்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்கள், குழந்தைகளே அதிக அளவில் நகைக் கடைகளில் காணப்பட்டனர்.

விற்பனை அதிகரிப்பு: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தங்க விற்பனை 30% அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக நகை விற்பனையாளர்கள் கூறியது...!

கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாக தங்க விற்பனை அதிகரித்துள்ளது. வியாழக்கிழமையும் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடைபெறும். இரண்டு நாள்களில் தமிழகம் முழுவதும் 10,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகும் என்று தெரிவித்தனர்.

Trending News