பள்ளிகள் ஊடகங்களை நேரடியாக தொடர்புகொள்ள தடை! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஊடகங்களை நேரடியாக தொடர்புகொள்ளக் கூடாது என அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 24, 2022, 09:24 PM IST
  • சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பள்ளிகள் ஊடகங்களை நேரடியாக தொடர்புகொள்ள தடை! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி  உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான சுற்றறிக்கையில், "பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அவரவர் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் படிக்க | அனைவரும் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் - மத்திய அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது. பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா? முட்டை நல்ல நிலையில் உள்ளதா? என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. தங்களின் சொந்த வேலைக்காக மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். பள்ளிகள் – பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு: WHO

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News