வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை இயக்குனர் கூறுகையில்; அடுத்த 2 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 7 செ.மீ., சீர்காழி, காயல்பட்டினத்தில் 6 செ.மீ., நிலக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 5 செ.மீ., சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கத்தில் தலா 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.