தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அண்மையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக நேற்று விசாரணை ஆணையம் ஜெயலலிதா குடும்பத்தை சேர்ந்தவர்களான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது தம்பி ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் தலா 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றது.
அதை தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தமிழக அரசிடம் வழங்கிய மருத்துவ அறிக்கைகளை ஆணையத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை சுகாதாரத் துறை செயலர் விசாரணை ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்பு சமர்ப்பித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களையும், இதுவரை ஆஜரான மருத்துவர்கள் அளித்த வாக்குமூல விவரங்களை ஆய்வு செய்து, அடுத்து ஆஜராக விருப்போரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை விசாரணை ஆணையத்தில் 27 பிரமாண பத்திரங்களும், 110 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. அவற்றை நீதிபதி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கிடையில் வரும் 24-ம் தேதியுடன் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஆணையம் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த அரசு, 3 மாதங்கள் அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட போது இருந்த சூழல் மற்றும் நிலைமை குறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு விசாரணை ஆணைய நியமன உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.