பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம், இந்நிலையில் நேற்று இரவு வைகாசி மாத பௌர்ணமி 07.09 மணிக்கு தொடங்கி இன்று மாலை 07.44 மணிக்கு நிறைவு அடைகிறது.
வைகாசி மாதம் பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நேற்று இரவு முதல் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது, இந்நிலையில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர், ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் தலையாகவே இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.
திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர், ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் அந்த நிலவியது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.
மேலும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா பரிசோதனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ