அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக மதுரை வந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், சென்னை திரும்ப திட்டமிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம்:-
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி பிரதமரை சந்தித்தேன். அவர் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றார். அதன்படி மத்திய அரசின் அனுமதியோடு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு மத்திய உள்துறை, சட்டத்துறை, சுற்று சூழல்துறை என அனைத்து அனுமதியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அலங்காநல்லூரை பொறுத்தவரை அங்குள்ள மக்கள் எப்போது நடத்த விரும்புகிறார்களோ அப்போது நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டுக்கான தடை முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். இந்த அவசர சட்டத்திற்கு வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிரந்தர சட்டமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டிற்கு இனி எந்த அமைப்பு தடை கேட்க நினைத்தாலும் அதனை தமிழக அரசு முறியடிக்கும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.