தோல்வி பயத்தால் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவருகிறார் மு.க.ஸ்டாலின் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு!!
நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக கூட்டணியில் வலிமையான வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் இணைந்துள்ளதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரண்டு போய் உள்ளதாகவும், அதனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஏதேதோ பேசி வருவதாகவும் விமர்சித்தார். மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் தமிழகம், இந்தியாவிலேயே சுகாதாரத் திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார். வேளாண்மைக்கு உயிராக இருக்கும் நீர் வளத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அதற்கான திட்டங்களை விளக்கிப் பேசினார்.
மக்கள் நலனுக்காக அரசு கொண்டுவரும் திட்டங்களை திமுக தடுக்க முயற்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மோடி மீண்டும் பிரதமரானால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.