டெங்கு, பன்றி காய்சல் பாதிப்பினை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்குமாறு மதுரை உயந்தீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது!
மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது...
தமிழகத்தில் தற்போது டெங்கு, சிக்குன்குனியா போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்சல்களால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, மருத்துவமனைகளில் போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, சிறப்பு வார்டுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு "தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையினை தமிழக சுகாதாரத்துறை வரும் 20-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர். மேலும் டெங்கு-பன்றி காய்ச்சல் நோய் பாதிப்புக்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது? எனவும் விளக்கம் அளிக்க வேண்டுமாய் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் வரும் 20-ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையினை ஒத்தி வைத்துள்ளனர்!