தமிழகம் - புதுச்சேரி உட்பட 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களுக்கான மொத்தம் 96 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2019, 06:29 PM IST
தமிழகம் - புதுச்சேரி உட்பட 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு title=

டெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைந்தது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 18) தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதேபோல தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்தது.

மக்களவை தேர்தலை பொருத்தவரை, தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், அசாம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் 5 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகளிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 1 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வந்தது. தமிழகத்தில் மாலை 5 மணி வரை 67.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாக்குமரி தொகுதியில் 50.07 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தேர்தல் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீதம் பதிவாகின என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களுக்கான மொத்தம் 96 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தை பொருத்த வரை 18 சட்டமன்ற தொகுதி மற்றும் 38 மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

Trending News