அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் முற்றி வருவதால் அக்கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நாளை மறுநாள்(ஜூன்23) நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு அதிமுகவில் உட்கட்சி பூசல் சம்பவங்கள் தொடர்கதையாக மாறியுள்ளன.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் அமர்ந்த கட்சியின் பொதுச்செயலாளர் அரியாசனம் அடுத்து யாருக்கு என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. இதை முன்வைத்து நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் விடாப்பிடியாக இருப்பதால் அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே ஓ.பி.எஸ் அணியில் இருந்த மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்ட சில தலைவர்கள் இ.பி.எஸ் அணிக்கு மாறி வருவதால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.
இந்த நிலையில் வரும் 23-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் கண்காணிப்பாளரிடம் ஓ.பி.எஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-
காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ் மனு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எதிர்வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. இருப்பினும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொதுக் குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டம் என்ற தகவல் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தொண்டர்களிடையே சலசலப்பு
இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 18-06-2022 அன்று அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளாய் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு என்றும், இதுபோன்ற தருணத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும், அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது என்றும், இதே மண்டபத்தில்
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பலமுறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டதாகவும், எனவே 'இடமில்லை' என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை
மேலும் செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் (Agenda) நிர்ணயம் செய்ய கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 18-06-2022 அன்று தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும்
உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறிய அஜித்! முந்திக்கொண்ட சிவகார்த்திகேயன்!
இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கடிதம்
இதனையடுத்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டிவிட்டர் மூலம் நான் வேண்டுகோள் விடுத்தேன். தற்போதுள்ள சாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, 23-06-2022 அன்று நடைபெறவுள்ள பொதுக் குழு மற்றும் செயற் குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து 19-06-2022 அன்று கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கழக சட்டதிட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பா. பென்ஜமின் அவர்கள் மேற்காணும் செயற் குழு மற்றும் பொதுக் குழுவிற்கு பாதுகாப்பு கோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கழக சட்ட திட்ட விதிகள்படி, சட்ட நடவடிக்கை எடுக்க கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.மேலும், 23-06-2022 அன்று நடைபெற உள்ள செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தினை தள்ளி வைக்கலாம் என்று ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையருக்கு கடிதம்
தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளபடியாலும், திரு. பா. பென்ஜமின் அவர்கள் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கழகத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க
வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR