'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா...' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!

Tamil Nadu Latest News: பாஜகவின் ஒன்பதரை வருட ஆட்சியே ஒரு பேரிடர் என்பதால் தான் தற்போது வரை இந்த வெள்ள பாதிப்பை பேரிடர் என்று ஏற்க மறுக்கிறார்களோ என மத்திய அரசை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2023, 03:48 PM IST
  • நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா...? - உதயநிதி
  • மக்களுக்காக நிதியை கொடுங்கள் என்று மீண்டும் மரியாதையுடன் கேட்கிறேன் - உதயநிதி
  • இவர்கள் அரசியல் ரீதியாக யோசிக்கின்றனர் - உதயநிதி
'நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா...' நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி! title=

Tamil Nadu Latest News: நகர்ப்புற சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில், பயனாளர்களுக்கு வழங்கி இன்று (டிச. 23) தொடங்கி வைத்தார்.

இதன் பின் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள 1,877 குழுக்களில் உள்ள 24  ஆயிரம் பேருக்கு, ரூ.125 கோடியே 50 லட்சம் கடன் வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 

நான்கு நாட்களுக்கு முன் நடக்க வேண்டிய நிகழ்ச்சி. வெள்ள பாதிப்பு காரணமாக இன்று நடைபெறுகிறது. பொருளாதர  விடுதலையே பெண் விடுதலைக்கான உண்மையான அடித்தளம். அந்த வகையில் திராவிட இயக்கம் தொடர்ந்து பெண்களுக்கு முன்னேற்றங்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் தமிழக அரசு அறிவித்த பிறகு, இப்போது மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றி வருகின்றன.

மேலும் படிக்க | தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடந்த ஆண்டு 28 ஆயிரம் கோடி ரூபாய் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது வரை 22 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சி மட்டுமல்ல, எங்கள் கட்சி நிகழ்ச்சியிலும் மகளிர் சுய உதவிகுழு மூலம் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தேன். இதையே சட்டமன்றத்திலும் வலியுறுத்தியிருக்கிறேன். மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கும் பொருட்கள் 'மதி சந்தை' என்கிற பெயரில் சந்தைப்படுத்தப்படுகிறது.

எனது பிறந்தநாளுக்கும் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களை பரிசாக வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது எனது வீட்டிலும், முதலமைச்சர் இல்லத்திலும் எங்கு பார்த்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களாகவே உள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

மேலும் படிக்க | நிர்மலா சீதாராமன் என்ன பிக் பாஸா? - ஆர்.எஸ்.பாரதி அதிரடி

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்,"நான் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினேனா?, மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் கேட்கிறேன் நான் என் சொந்த விருப்புகாக கேட்கவில்லை. மக்கள் பெரும் பேரிடரை சந்தித்துள்ளனர் என்பதால் தான் கேட்கிறேன்.  இதை பேரிடர் என்றும் ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். பாஜகவின் ஒன்பதரை வருட ஆட்சியே ஒரு பேரிடர் என்பதால் தான் இதை பேரிடர் என்று ஒப்புகொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

ஒன்றிய குழு பாராட்டி உள்ளது. ஆனால் இவர்கள் அரசியல் ரீதியாக யோசிக்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை மக்கள் மிக பாதிப்படைந்துள்ளனர். இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. அவர்கள் பாதிப்பில் இருந்து வெளியில் வரவில்லை. இதை மனதில் வைத்து கொண்டு நிதியை கொடுங்கள் என்று மீண்டும் மரியாதையுடன் கேட்கிறேன்.

அப்படி என்ன நான் அநாகரிகமாக பேசிவிட்டேன். அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சரின் மரியாதைக்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டும் என்றாலும் கூறுகிறேன். ஏரல் பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. அமைச்சர்கள் கே.என். நேரு, மூர்த்தி அங்கு நடைபெற்று வரும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர். மீண்டும் நாளை நான் அங்கு செல்ல உள்ளேன். முதல்வர் ஒன்றிய பிரதமரை பார்க்கவும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் டெல்லி சென்றார். அதுவும் முக்கியமான வேலை தான். அவர் மறுநாளே களத்திற்கு வந்துவிட்டார்" என்றார்.

முன்னதாக நேற்று டெல்லியில் செய்தியாளரை சந்தித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். மேலும், நெல்லை, தூத்துக்குடியில் மாநில அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் செல்வதற்குள் தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு அங்கு சென்றுவிட்டதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்கு வந்திருந்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்றும் கூறினார். இதற்கு திமுக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | கடுப்பில் திமுக? இந்த முறையும் ஆளுநர் உரையில் பிரச்னையா? - தமிழக அரசியலில் சூழும் போர்மேகங்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News