IPL 2023 RR vs RCB: ஐபிஎல் போட்டி என்றாலே பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்தது தான். ஒரு நாள் 200 ரன்களை தாண்டி அதிரடியாக சேஸ் செய்யும் அணி அடுத்த போட்டியில் வெறும் 10 ஓவர்களில் இரட்டை இலக்கத்தில் ஆல்-அவுட்டாவார்கள் என்றால், அது தான் டி20 கிரிக்கெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
அன்றைய தினம் சிறப்பாக விளையாடும் அணிகள் மட்டுமே அன்றைய டி20 போட்டியை வெல்லும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான கட்டத்தில் ஆர்சிபி அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுவும், கொல்கத்தா உடனான கடைசி போட்டியில் இமலாய இலக்கை எட்டி 'அசூர' அணியாக காணப்பட்ட ராஜஸ்தானை ஊதித்தள்ளி பெங்களூரு இந்த வெற்றியை பெற்றுள்ளது எனலாம்.
டூ பிளேசிஸ் அரைசதம்
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. விராட் கோலி நிதானமாக விளையாடி வந்த நிலையில், பாப் டூ பிளேசிஸ் பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.
விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழக்க, டூ பிளேசிஸ் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சை தாக்கினர். டூ பிளேசிஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடக்கம். தொடர்ந்து, லோம்ரோர் 1, தினேஷ் கார்த்திக் 0 என ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த மேக்ஸ்வெல் சந்தீப் சர்மா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
அனுஷ் ராவத் அதிரடி
அவர் 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 54 ரன்களை எடுத்தார். இறுதிக்கட்டத்தில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 29 ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை பெங்களூரு எடுத்தது. ஆசிப், ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பவர்பிளேவில் ஆர்சிபி ஆதிக்கம்
தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. கடந்த போட்டியில் வெறியாட்டம் ஆடி 98 ரன்களை குவித்து, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜெய்ஸ்வால் இதில் டக் அவுட்டனார்.
அடுத்த ஓவரிலேயே பட்லரும் டக் அவுட்டாகி வெளியேறினார். அதே ஓவரில் சாம்சனும் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் பெங்களூருவின் வலைக்குள் சிக்கிக்கொண்டது. படிக்கல் 4, ரூட் 10, ஜூரல் 1, அஸ்வின் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அஸ்வின் ஒரே பந்தை கூட சந்திக்காமல் ரன்அவுட்டானார்.
A formidable performance from @RCBTweets as they claim a mammoth 112-run victory in Jaipur
They climb to number on the points table
Scorecard https://t.co/NMSa3HfybT #TATAIPL | #RRvRCB pic.twitter.com/BxkMKBsL3W
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
பர்னல் ஆட்டநாயகன்
சிறிது நேரம் அதிரடி காட்டிய ஹெட்மயர் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் என 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். கரன் சர்மாவின் ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். டெயிலெண்டர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வெறும் 59 ரன்களுக்கு ராஜஸ்தான் ஆட்டமிழந்தது. ஆர்சிபி பந்துவீச்சில் பர்னல் 3 விக்கெட்டுகளையும், பிரேஸ்வெல், கரன் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல், சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். பர்னல் ஆட்டநாயகனாக தேர்வானார்.
3ஆவது குறைந்தபட்ச ஸ்கோர்
ராஜஸ்தான் அணிக்கு இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிக குறைந்த ஸ்கோராகும். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரும் இதுதான். 2017ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு எடுத்த 49 ரன்கள் தான் முதல் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
2009இல் ஆர்ஆர்
2009இல் தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் டவுண் நகரில் நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 133 ரன்கள் எடுத்திருந்தது, அதே போட்டியில் ராஜஸ்தான் 58 ரன்களுக்கு ஆல்-அவுட்டனது. இதுதான் அந்த அணியின் குறைந்த பட்ச ஸ்கோராகும். இந்த போட்டியில் 59 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த இரண்டு பட்டியல்களிலும் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பிளேஆப் வாய்ப்பு யாருக்கு?
புள்ளிப்பட்டியலில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 12 புள்ளிகளுடன் 5ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளன. தற்போது பெங்களூரு அணிக்கு நல்ல நெட் ரன்ரேட் கிடைத்திருப்பதால், இதைபோன்று அடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் பெங்களூரு பிளேஆப் செல்லும் வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு போட்டியே இருப்பதால், அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் அடுத்த கடைசி லீக் போட்டியில், பஞ்சாப் அணியுடன் வரும் மே 19ஆம் தேதி மோத உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ