ஐபிஎல் 2017: 21-வது லீக், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி

Last Updated : Apr 20, 2017, 10:01 AM IST
ஐபிஎல் 2017: 21-வது லீக், சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ஐபிஎல் போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு நடைப்பெற்றது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள்  மோதின.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது. 

முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர் - தவான் களமிறங்கினர்.  7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் வெளியேறினார். இதையடுத்து தவானுடன் ஜோடி சேர்ந்தார் கேன் வில்லியம்சன். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 191 ரன்களை குவித்தது. அந்த அணியில் தவான் 70 (50) ரன்களும், வில்லியம்சன் 89 (51) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டெல்லி சார்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிங்கிய சஞ்சு சாம்சன் - சாம் பில்லிங்ஸ் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சாம் பில்லிங்ஸ் 13 (9) ரன்களில் வெளியேறனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடி காட்ட அணியின் ரன்வேகம் அதிகரித்தது. 

சஞ்சு சாம்சன் 42 (33) ரன்னிலும், நாயர் 33 (23) ரன்னிலும் வெளியேற, பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் - மேத்யூஸ் ஜோடி அதிரடி காட்டத் தொடங்கியது. எனினும் கடைசி ஓவருக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சித்தார்த் கவுல் மேத்யூஸ் 31(23) விக்கெட்டையும் வீழ்த்தினார். 

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 (31) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Trending News