‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வேண்டும் -ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 9, 2018, 07:46 AM IST
‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வேண்டும் -ஸ்டாலின் title=

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு, மனமுடைந்து இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் முதலில் நிறைவேற்றப் பட்டது. 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்களில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு உடனே மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீர்மானம் போடப்பட்டது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

தீர்மானம்:

‘நீட்’ தேவையில்லை எனும் தமிழக மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வேண்டும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006 ஆம் ஆண்டில் முறையாகச் சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத்தேர்வினை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய தமிழ்நாட்டிற்கு, “நீட்"" தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஏளனமாகக் கருதி இழிவுபடுத்திடும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு மாறாக மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வையும் நடத்தி, இப்போது ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமிக்க சர்வாதிகாரப் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

ஒரு போட்டித் தேர்வுக்கு தேவையில்லாத கடுமையான கெடுபிடிகளை தேர்வு மையங்களில் வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தி, தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அவமானப்படுத்தித் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவர் உலகம் எப்போதும் கண்டும் கேட்டுமிராத சி.பி.எஸ்.இ. வாரியத்தின் பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இன்னும் மனித உயிர்களைக் காவு கேட்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவிற்கு, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையொட்டி மேலும், காலங்கடத்தாமல் உடனடியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதற்கான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Trending News