இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் ஆர்கே சுரேஷ் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று மறுத்துள்ள நிலையில், ஒப்பந்தத்தை சரிபார்க்கவும் என்று ஆர்கே சுரேஷ் கூறி உள்ளார்.
'தென் மாவட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஆர்கே சுரேஷ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், அந்த போஸ்டரில் இசை யுவன் ஷங்கர் ராஜா என்று இருந்தது. சிறிது நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து எனக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் பதிவிற்கு பதிலளித்த ஆர்.கே.சுரேஷ், "வணக்கம் யுவன் சார் நீங்கள் ஒரு படத்திற்கும், கச்சேரிக்கும் கையெழுத்து போட்டு உள்ளீர்கள். தயவுசெய்து ஒப்பந்தத்தை சரிபார்க்கவும் நன்றி" என்று பதிவிட்டு உள்ளார்.
இந்த பதிவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நிதி நிறுவன மோசடியில் சிக்கி இருந்த ஆர்கே சுரேஷ் தற்போது அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் படத்தில் பிஸியாகி உள்ளார்.
இதற்கிடையில், யுவன் ஷங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.