எதிர்வரும் 20 ஓவர் உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் டேரன் சமி தெரிவித்துள்ளார்.
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை நிச்சயமாக வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வெல்லும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டேரன் ஷமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு முதல் நாங்கள் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறோம். அது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் இம்முறை உலகக் கோப்பை டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதினால் இந்த கோப்பையை சொந்த மண்ணில் வெல்லும் முதல் அணியாக நாங்கள் இருப்போம் என்று நம்புகிறேன்.
எங்களது அணியில் உள்ள வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அளவில் விளையாடவில்லை என்றாலும் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் எங்களது அணி வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இம்முறை டி20 உலககோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம். என தெரிவித்துள்ளார்.