Indian Railways: நீங்கள் ரயிலில் பயணம் செய்தால் உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியை ரயில்வே உங்களுக்கு அளிக்கும். ஆம்!! கொரோனா நெருக்கடி காரணமாக, மக்கள் பயணம் செய்ய அஞ்சுவதால், ரயில்களில் பல இருக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன.
இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய, ரயில்வே அதன் பயணிகளுக்கு தள்ளுபடி அளிக்கிறது. இதனால் பயணிப்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும். இதன் காரணமாக இன்னும் பலரும் ரயில்களில் பயணிக்க முன்வரக்கூடும். ரயில்வே துறையின் வருவாயும் இதன் மூலம் பெருகக்கூடும்.
இப்போது ஒரு ரயில், ரயில் நிலையத்திலிருந்து கிளம்புவதற்கு முன் ஒரு சார்ட் தயாரிக்கப்படுகிறது. அதில் பெர்த்துகள் காலியாக இருந்தால் அவற்றில் 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் இதன் நன்மை கிடைக்கும். அதாவது, ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்து, நீங்கள் ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னர், ஆன்லைனிலோ (IRCTC) அல்லது கௌண்டரிலோ சென்று டிக்கெட் வாங்கினால், உங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இந்த வசதி இன்டர்சிட்டி சேர்கார் உட்பட அனைத்து சிறப்பு ரயில்களிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
சில வழித்தடங்களில் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் இன்னும் கிடைப்பதில்லை. ஆனால் ரயில்வே பயணிகளுக்காக ஏங்குகிற பல வழித்தடங்களும் உள்ளன. பயணிகள் அதிகமாக இல்லாத காரணத்தால் சில இடங்களில் ரயில்வே ரயில்களை ரத்து செய்கிறது. சில இடங்களில் அவற்றின் பயணங்கள் குறைக்கப்படுகின்றன.
10 சதவிகித தள்ளுபடிக்கான இந்த விதி 1 ஜனவரி 2017 முதல் தொடங்கப்பட்டது. இது ராஜ்தானி / துரான்டோ / சதாப்தி போன்ற ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், அனைத்து ரிசர்வ் வகுப்பு ரயில்களிலும் ரயில்வே இந்த வசதியை அறிமுகப்படுத்தியது.
ரயில் டிக்கெட்டுகளில் இந்த தள்ளுபடியை நீங்கள் பெறுவதற்கான வழிகளைப் பற்றி ரயில்வே ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது: 1. முதல் சார்ட் செய்யப்பட்ட பிறகு இறுதி டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் 10% தள்ளுபடி கிடைக்கும். 2. முன்பதிவு கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் சேவை வரி போன்றவற்றில் எந்தவிதமான விலக்குகளும் இருக்காது. பயணிகள் அவற்றை செலுத்த வேண்டும். 3. TTE ஒதுக்கும் காலியிடங்களிலும் 10% தள்ளுபடி கிடைக்கும்.