பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்கும் காங்கிரஸ், கல்விக்கடன் ரத்து சாத்தியமா? சிதம்பரம் விளக்கம்

P. Chidambaram, Congress manifesto: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், கல்விக்கடன் ரத்து உள்ளிட்டவை சாத்தியமா என்பது குறித்து ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கும் நிலையில், அதனை பொய்களின் மூட்டை என பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்து ப.சிதம்பரம், நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

1 /5

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், தேசிய அளவில் சாதிவாரி, சமூக - பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான (இடபிள்யூஎஸ்) 10% இடஒதுக்கீடு அனைத்து சாதி, சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படும். மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.

2 /5

ரூ.25 லட்சம் வரை, பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். மாநில அரசுகளுடன் கலந்துபேசி, புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ், சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பிணையின்றி ரூ.7.5 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். 2024 மார்ச் 15 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கப்படும்.

3 /5

அத்துடன், 9-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செல்போன்கள் வழங்கப்படும். மாநிலங்களின் விருப்பப்படி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். மகாலட்சுமி திட்டம்’ அமல்படுத்தப்படும். இதன்படி ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 2025 முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். மீனவர்களுக்கான டீசல் மானிய உதவி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மீனவர்கள் தொடர்பாக அண்டை நாடுகளுடன் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயல் திட்டம் வகுக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கொடுத்துள்ளது.

4 /5

இந்த தேர்தல் அறிக்கை பொய் மூட்டை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. நிறைவேற்றப்பட முடியாத திட்டங்களை வெற்று வாக்குறுதிகளாக காங்கிரஸ் கொடுத்திருக்கிறது என்றும் பாஜக சாடியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவராக இருந்த ப சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி போட்டுவைத்த பேஸ்மென்டில் தான் மோடி இத்தனை நாள் சொகுசாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார், அதைக்கூட நிர்வாக திறமையின்மையால் சீரழித்திருகிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

5 /5

இதற்குமேல் பாஜகவின் ஆட்சியை மக்கள் நம்பி ஏமாறமாட்டார்கள் என தெரிவித்திருக்கும் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கும் அத்தனை தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படக்கூடியவை என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மேலும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட கடந்த காலங்களில் சாத்தியமில்லை என கூறப்பட்ட திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் கட்சி செயல்படுத்தி காட்டியிருக்கிறது என்றும் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.