Mano Thangaraj : தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அதிருப்தி.
Mano Thangaraj News : தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், மனோ தங்கராஜ் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார். இது குறித்த அறிவிப்பு செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு வெளியானது. அதில், விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின்துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சராகியுள்ளனர். கோ. வி. செழியன், சேலம் ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் உள்ளிட்டோரின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் விடுக்கப்பட்டுள்ளனர். துறை மாற்றப்பட்டதால் பொன்முடி அதிருப்தியில் இருக்கும் நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு மனோ தங்கராஜூம் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
நன்றாக பணியாற்றியதற்கு கிடைத்த பரிசு தான், அமைச்சரவையில் இருந்து நீக்கமா? என்ற கேள்வியை மறைமுகமாக கேட்கும் வகையில் எக்ஸ் பகத்தில் தன்னுடைய பணிகளை பட்டியலிட்டுள்ளார் மனோ தங்கராஜ்.
எக்ஸ் பக்கத்தில் மனோ தங்கராஜ் எழுதியிருக்கும் பதிவில், 2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என எழுதியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமைச்சராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்த திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என ஒரு வார்த்தைகூட இந்த பதிவில் இடம்பெறவில்லை. புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்தும், துணை முதலமைச்சராக பொறுபேற்க இருக்கும் உதயநிதியை வாழ்த்தியும் அவர் எந்த பதிவும் போடவில்லை.
இதில் இருந்தே அவர் அமைச்சரவை மாற்றத்தால் கடும் அதிருப்தியில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், நன்றாக பணியாற்றியதற்காக திமுக அவருக்கு கொடுக்கும் பரிசு இதுதானா? என்றும் அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.