Serious Side Effects of Processed Foods: உணவு பழக்க வழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான சீரான உணவு உட்கொள்பவர்களை நோய் எளிதில் தாக்குவதில்லை. ஆனால் துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியத்திற்கு வேட்டுவைத்து விடும்.
துரித கதியிலான வாழ்க்கையில், நேரம் இன்மை காரணமாக, ரெடி டு ஈட் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை உண்ணும் பழக்கம் வெகுவாக அதிகரித்துவிட்டது. இது பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்: இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் அவசரம் தான். நேரத்தை ஒழுங்காக நிர்வகிக்காமல், நேரம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ரெடி ஈட் வகை உணவுகளையும் அதிகம் சாப்பிடுகிறோம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது துரித உணவுகளை, வாரத்திற்கு ஒரு முறை அல்லது எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே வழக்கமாகி போனால், உடல் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்படும்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க சோடியம் மற்றும் பிற பிரசர்வேட்டிவுகள் கலக்கப்படுகின்றன. அதோடு ட்ரான்ஸ்போர்ட் நிறைந்தது என்பதால், கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் இதய தமனிகள் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
செரிமான சக்தி பாதிக்கப்படுதல்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து என்பது மருந்துக்கும் இருக்காது. கார்போஹைட்ரேட் மட்டுமே காணப்படும். இதனால் மலச்சிக்கல், வயிற்று வலி, ஆசிடிட்டி, வயிறு உப்பிசம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காக, இந்த வகை உணவுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் குடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்து குறைபாடு: பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கப்படும் செயல்முறை காரணமாக, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. உணவுகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் அளிக்கப்படுகின்றன. நார்ச்சத்து என்பது மருந்துக்கும் இருக்காது. எனவே உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பலவிதமான நோய்களுக்கு ஆளாக நேரிடும். உடலும் பலவீனமடையும்.
உடல் பருமன்: பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் முக்கிய பிரச்சனை உடல் பருமன். கலோரி அளவு மிக அதிகம் கொண்ட இந்த உணவுகள், உடம்பில் கொழுப்பு சேர காரணமாகிறது. உடல் பருமன் பல தீவிர நோய்களுக்கு ஆதாரம் என்பதை மறுக்க முடியாது. இதனால் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையும் ஏற்படும்.
மன ஆரோக்கியம் பாதிக்கும் அபாயம்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் சோடியம் இருப்பதால் மனப்பதற்றம், மனச்சோர்வு மன உளைச்சல் ஆகியவை ஏற்படலாம். இது உங்கள் செயல் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.