IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் RTM (Right to Match) கார்டுகளை பயன்படுத்தியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை தக்கவைக்க முயற்சிக்கும். அந்த வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது. இந்த மெகா ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் ஏலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு (IPL 2025 Mega Auction) விதிகள், ஏலம் நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கடந்த 2022 மெகா ஏலத்தில், ஒரு அணி மொத்தம் 4 வீரர்களை தக்கவைக்கலாம். அதில் 2 இந்திய வீரர்கள் + 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 வெளிநாட்டு வீரர் என்ற கணக்கில் தக்கவைத்துக்கொள்ளலாம். கடந்த ஏலத்தில் RTM கார்டு (Right to Match) ஆப்ஷனும் வழங்கப்படவில்லை.
RTM ஆப்ஷன் என்றால், ஒரு வீரர் உங்கள் அணியில் இருக்கிறார் என்றால் அவரை நீங்கள் தக்கவைக்காமல் ஏலத்திற்காக விடுவித்த பின்னர், அந்த வீரர் ஏலத்திற்கு வருவார். அப்போது ஒரு அணி அவரை குறிப்பிட்ட தொகையில் எடுத்துவிடும். ஆனால், RTM கார்டை பயன்படுத்தி அந்த வீரரை விடுவித்த அணியே, தற்போதைய ஏலத் தொகையில் வாங்கிக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, மேக்ஸ்வெல் 2024 சீசனில் ஆர்சிபிக்காக விளையாடினார். ஆர்சிபி மேக்ஸ்வெல்லை தக்கவைக்காமல், மெகா ஏலத்திற்கு விடுவிக்கிறது என வைத்துக்கொள்வோம். ஏலத்தில் மேக்ஸ்வெல்லை சிஎஸ்கே ரூ. 7 கோடிக்கு எடுத்துவிட்டால், ஆர்சிபி அணி அதன் RTM கார்டை பயன்படுத்தி இந்த ரூ. 7 கோடிக்கே மேக்ஸ்வெல்லை எடுத்துக்கொள்ளலாம். ஆர்சிபி அணி ஏலத்தில் அவருக்காக போராட வேண்டியிருக்காது.
ஆனால், இந்த RTM கடந்த மெகா ஏலத்தில் நீக்கப்பட்டுவிட்டது. மீண்டும் இதை இந்த மெகா ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும் என அணிகளின் உரிமையாளர்கள் ஐபிஎல் கமிட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், RTM கார்டு ஆப்ஷன் கொண்டுவரப்பட்டால், சிஎஸ்கே அணி (Chennai Super Kings) இந்த 3 வீரர்களை விடுவித்தாலும், மெகா ஏலத்தில் RTM பயன்படுத்தியாவது தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது. அவர்களை இதில் காணலாம்.
துஷார் தேஷ்பாண்டே: சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக விளையாடியவர் துஷார் தேஷ்பாண்டே (Tushar Deshpande). கடந்த சீசனில் பந்து கையில் கிடைக்கும் போதெல்லாம் விக்கெட்டை கைப்பற்றிக் கொடுத்தவர். எனினும் இவரை தக்கவைக்கும் வாய்ப்பு குறைவுதான். எனவே, இவரை விடுவித்தாலும் RTM மூலம் கொக்கிப் போட்டு தூக்க சிஎஸ்கே முயற்சிக்கும். தற்போது இவர் Capped வீரர் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ரச்சின் ரவீந்திரா: கடந்த சீசனில் இவர் சிஎஸ்கேவுக்கு சிறப்பாக விளையாடாவிட்டாலும், ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) மீது அணி நிர்வாகத்திற்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. எனினும், பதிரானா, கான்வே உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் நிலையில், இவரை தக்கவைக்கும் சாத்தியம் குறைவுதான். எனவே, இவரும் நல்ல தொகையில் சிக்கினால் RTM மூலம் சிஎஸ்கே தூக்கிவிடும்.
மகேஷ் தீக்ஷனா: மிஸ்டிரி ஸ்பின்னர்களின் தேவை டி20இல் அதிகம் இருக்கிறது. எனவே, தீக்ஷனாவை (Maheesh Theekshana) விடுவித்தால் குறைந்த தொகையில் சிஎஸ்கேவால் ஏலத்தில் எடுக்க முடியாது. அந்த வகையில், RTM கார்டை பயன்படுத்தியாவது இவரை சிஎஸ்கே எடுக்க முயற்சிக்கும். எத்தனை RTM கார்டுகள் ஒரு அணிக்கு வழங்கப்படும் என்பதற்கும் இன்னும் விடையில்லை.