IPL Mega Auction 2025: ஐபிஎல் 2025 சீசனின் மெகா ஏலத்தை முன்னிட்டு, 2024 சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) விடுவிக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
இந்த சீசனில் அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் மெகா ஏலத்தில் பல முக்கிய வீரர்களை விடுவித்தே ஆக வேண்டும். அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கவே இயலாத ஐந்து முக்கிய வீரர்களை மட்டும் இங்கு பார்ப்போம்.
2024 ஐபிஎல் சீசன் கொல்கத்தா அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்து சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றுவிட்டது. இதே அணியில் கடந்தாண்டு ஸ்டார்க், பில் சால்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மட்டுமே இல்லை எனலாம்.
இருப்பினும் இந்தாண்டு இவர்களுடன் கௌதம் கம்பீரும் பயிற்சியாளர்கள் முகாமிற்கு வந்து கொல்கத்தா அணியின் மூன்றாவது கோப்பையையும் முத்தமிட்டுவிட்டார். 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அந்த அணி கோப்பையை வென்றிருக்கிறது.
அந்த வகையில், 2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இங்கு காணலாம். கடந்த முறை மெகா ஏலத்தில் மொத்தமே 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. அதிலும் இந்திய வீரர்களில் அதிகபட்சமாக 3 பேரையும், வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்சமாக 2 பேரையுமே எடுக்க முடிந்தது. இந்த ஏலத்தில் இதில் மாற்றம் வரலாம், வராமலும் போகலாம். எனவே, கடந்த ஏலம் விதிமுறையின்படி இந்த கணிப்பு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிட்செல் ஸ்டார்க்: இவரை இந்த முறை ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு கேகேஆர் தூக்கியது. ஆனால் கொடுத்த காசிற்கு பிளே ஆப்பில் வட்டியும் முதலுடனும் விக்கெட்டுகளை தூக்கி கோப்பையையும் தூக்க உதவினார். இருப்பினும் இவரை தக்கவைக்க இயலாது என்பதால் கேகேஆர் இவரை நிச்சயம் விடுவிக்கும் எனலாம்.
ஆன்ட்ரே ரஸ்ஸல்: இவரை நிச்சயம் கொல்கத்தா அணி விடுவிக்கும் எனலாம். இவர் அடுத்த தொடரில் விளையாடும்பட்சத்தில் இவரை விடுவித்து ஏலத்தில் போராடி திரும்ப எடுக்க முயற்சிக்கும். நரைனை தக்கவைக்க வேண்டும் என்றால் இவரை விடுவிப்பார்கள். ஒருவேளை நரைன் அடுத்த தொடரில் விளையாடாவிட்டால் ரஸ்ஸலை தான் தக்கவைப்பார்கள்.
வெங்கடேஷ் ஐயர்: ஆம், ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி என இந்திய வீரர்களை கேகேஆர் தக்கவைக்கும்பட்சத்தில் இம்முறை வெங்கடேஷை விடுவித்து, ஏலத்தில் தூக்கவே அந்த அணி முயற்சிக்கும்.
வைபவ் அரோரா: இந்த சீசனில் கேகேஆர் அணியின் முக்கிய பந்துவீச்சாளரில் இவரும் ஒருவர். இருப்பினும் இவரை தக்கவைக்க இயலாது என்பதால் இம்முறை கேகேஆர் விடுவிக்கும்.
நிதிஷ் ராணா: இவரையும் கேகேஆர் அணியால் தக்கவைக்க இயலாது. மிடில் ஆர்டர் அதிரடியான வீரர், கடந்த சீசனின் கேப்டன் என்றாலும் இம்முறை இவரை விடுவித்து, ஏலத்தில் தூக்க அந்த அணி முயற்சிக்கும்.