பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

பரிகாரங்களால் பலன் உண்டா? சில தருணங்களில், பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 4, 2021, 06:35 AM IST
பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்? title=

பரிகாரங்களால் பலன் உண்டா? சில தருணங்களில், பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

தேர்வில் பலமுறை தோற்றவன், திரும்பவும் தேர்வு எழுதுகிறான்; வெற்றி பெறுகிறான். வெற்றியை அடைவதற்கு, தேர்வு எழுதுவதும் பரிகாரம்தான்! தகுதி இருந்தும் வேலை கைநழுவிப் போகுமோ எனும் பயத்தில், பிரபலங்களிடம் இருந்து சிபாரிசுக் (Recommendation) கடிதம் பெற்று அதையும் இணைத்துக் கொடுப்பார்கள்; வெற்றி பெறுவார்கள்! அதேநேரம்... திரும்பத் திரும்ப தேர்வு எழுதுபவனும், சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொடுப்பவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது; முயற்சியில் தோல்வியைத் தழுவியவர்களும் உண்டு.

வியாபார நோக்கம் பரிகாரத்தில் எடுபடாது. மற்ற அலுவல்களில் வெற்றி பெற்றுவிட்டதை மனதில்கொண்டு, பரிகார விஷயமும் அப்படித்தான் என்று எடுத்துக்கொண்டால், ஏமாற்றமே மிஞ்சும். அனுபவத்தை வைத்து அதன் காரணத்தை வரையறுக்க இயலாது. அனுபவம் பலவிதம்.

உறுதியான காரணம், அதன் சரியான செயல்பாடு- இவை நிச்சயமாக வெற்றியளிக்கும். தகுதியைத் தக்க வைத்துக்கொள்ளவும், தடைகளை அகற்றவும் பரிகாரம் பயன்படும். அதை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தவறு நிகழக்கூடாது. தவறு செய்ததால் தான் பரிகாரத்தை ஏற்கவேண்டிய நிர்பந்தம் வந்தது. அந்தப் பரிகாரத்திலும் தவறு இருந்தால் பலன் ஏற்பட வழியில்லை. பரிகாரத்தைச் சந்திக்காமல், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அவர்களின் பட்டியலில் நம்மையும் இணைத்துக்கொள்வது சிறப்பு. பரிகாரத்தை நம்பி அடிக்கடி தவறு செய்வது பலன் அளிக்காது!

ALSO READ | சன்னிதியில் கண்ணை மூடிக் கொண்டு வணங்கக் கூடாதாமே ஏன்?

தவறு செய்தவன் தண்டிக்கப்படுகிறான்; நன்மை செய்தவன் பாராட்டப்படுகிறான். காரணம் உறுதியாக இருந்தால், காரியம் நிறைவேறிவிடுகிறது. மனம் வருந்தி, முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் முறைப்படி பரிகாரம் செய்தால் பலன் உண்டு.

கர்ப்பப்பையை அகற்றியவர்களுக்கு, பரிகாரத்தால் குழந்தை பிறக்காது. பரிகாரத்துக்குக் கட்டுப்படாத தவறு களும் உண்டு. இதுபோன்றவற்றில், பரிகா ரத்தை நடைமுறைப்படுத்தி பலனை எதிர் பார்ப்பது சிறப்பல்ல. மாறா வியாதியில் மருந்து செயல்படுவதில்லை. தவற்றை உணர்ந்தவனுக்குப் பரிகாரம் பலன் அளிக்கும். தவற்றை மறைப்பதற்குப் பரிகாரம் கை கொடுக்காது. தகுதியில்லாத ஒன்றைப் பெறுவதற்கு பரிகாரம் பயன்படாது. அழிவின் விளிம்பில் நிற்பவன் ‘கருணை மனு’ அளித்தால் பரிசீலிக்கப்படும். எதிர்த்து வாதாட முயன்றால் பரிசீலனை இருக்காது. பரிகாரம் நமது பிறப்புரிமை இல்லை. பரிகாரம் என்பது தண்டனை போன்றது. தண்டனையை முறைப்படி அனுபவித்தால் விடுதலை உண்டு.

அடிக்கடி தவறு செய்பவர்களைப் பரிகாரம் கை தூக்கிவிடாது. தெரிந்தோ தெரியாமலோ தவறு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்போது, பரிகாரம் வாயிலாக விழிப்பு உணர்வு ஏற்படச் செய்து, நல்லவராக மாற்றும் சாஸ்திரத்தின் முயற்சியே பரிகாரம். பரிகாரம் மனம் சார்ந்த விஷயம்; பணம் சார்ந்த விஷயம் அன்று. மனதைத் தூய்மைப்படுத்தி மீண்டும் தவறு செய்யாதவனாக மாற்றுவதே பரிகாரத்தின் குறிக்கோள்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News