புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை லிசா ரே, இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார்...!
இந்திய வம்சாவளியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை லிசா ரே கனடா நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சரத்குமார் நடித்த நேதாஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மல்டிபிள் மைலோமா எனும் அரிய வகைப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக நடிகை லிசா ரே நீண்ட காலமாக சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜேசன் தேஹ்னி என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து சமீபத்தில் தான் புற்றுநோயிலிருந்து விடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
கடந்த ஜூன் மாதம் லிசா ரேவுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு சூஃபி என்றும், சோல்அய் என்றும் அவர் பெயரிட்டுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர் தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் ``வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் வரும் புதுப்புது சவால்கள் புதிய அனுபவத்தைக் கற்றுக்கொடுக்கின்றன. கொடிய புற்றுநோயால், வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடன்தான் வாழ வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தேன். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்துள்ளது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள, நானும் என் கணவரும் திட்டமிட்டோம். அதன்படி, இந்த இரட்டைக் குழந்தைகளை இந்த உலகிற்குக் கொண்டு வந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.