விரைவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள “அலகாபாத்” நகரின் பெயரை “பிரயாக்ராஜ்” என்று மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இதுக்குறித்து உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர், “உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் விருப்பம் அலகாபாத்தின் பெயரை ப்ரயாக்ராஜ் என மாற்ற வேண்டும். இது ஒரு நல்ல செய்தி. “பிரயாக்ராஜ்” என்ற பெயரில் இந்த நகரத்தை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.. எல்லோரும் ஏற்றுக்கொண்டால் நிச்சயம் பெயர் மாற்றம் செய்யப்படும்” என்று ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் கூறினார்.
கங்கை, யமுனை இரண்டு நதிகளும் சேரும் இந்த இடத்தில் "பிரம்மன்" குளித்து பிராத்தனை செய்ததால், அந்த இடத்திற்கு "ப்ரயாக்" என பெயர் வந்தது எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இதற்கு மாநில ஆளுநர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது என தகவல்கள் வந்துள்ளது. இந்த பெயர் மாற்றம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடக்கும் மகா கும்பமேளாவுக்கு முன்னர் செய்யப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதற்க்கு சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் கட்சி உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் யோகி ஆதித்யநாத் முடிவுக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சமீபத்தில் அம்மாநிலத்தில் மொகல்சராய் என்ற ஊரின் ரயில் நிலையம் "தீன்தயாள் உபாத்தியா" என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது