பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 21-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 41 இடங்களில் 31 இடங்களை பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முஸ்லிம் மாநாட்டுக் கட்சியும் தலா 3 இடங்களைக் கைப்பற்றின.
இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் கருப்புச் சாயம் பூசியும், பழைய டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் கொடிகளை எரித்தும் தங்கள் எதிர்ப்பை மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலைக்கான பிரச்சாரத்தை துவக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து யோகா குரு பாபாராம்தேவ் கூறியதாவது:- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலைக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்போம் என்று நவாஸ் ஷெரீப் கூறி வருகிறார். நமது குழந்தைகள் காஷ்மீரை வரைபடத்தில் மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் அதை கைப்பற்றியுள்ளது. நமது நாட்டின் ஒரு பகுதியை கோழைத்தனமான பாகிஸ்தான் கைப்பற்றும் போது, நாம் அமைதியாக இருக்க முடியாது. என்று தெரிவித்தார்.