சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது.
Supreme Court verdict over women's entry in Kerala's #SabarimalaTemple: National Ayyappa Devotee association files a review petition in the Supreme Court challenging the earlier verdict of the Court.
— ANI (@ANI) October 8, 2018
உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. போராட்டத்தில் சில பெண்கள் பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக திருவனந்தபுரத்தில் கள்ளிப்பாலம் பகுதியிலும், இடுக்கியிலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சபரிமலை கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய ஐயப்பன் பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!