ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பலரது மீது பொது பாதுகாப்பு சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் நாள் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-னை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து., அமைதி முறையை மனதில் வைத்து பள்ளத்தாக்கின் அரசியல் தலைவர்களை அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. இது காஷ்மீர் மீதான அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையைக் காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்க்கட்சிகளிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை பெற்றபோதிலும், அரசாங்கம் தனது படியிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது, குறிப்பாக முன்னாள் முதல்வரும், மூத்த மாநிலத் தலைவருமான ஃபாரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது அரசாங்கத்தின் தனிச்சிறப்பு.
ஒரு நபர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், அவர் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை மீறினால் அல்லது மக்களைத் தூண்ட முயன்றால், அவருக்கு எதிராக பொது பாதுகாப்பு சட்டம் (PSA) விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் தெளிவாகக் கூறியுள்ளது. அரசாங்க வட்டாரங்களின்படி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் கூறப்படும் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் வரவிருக்கும் காலங்களில் விதிக்கப்படலாம்.
370-வது பிரிவை நீக்குவது தொடர்பான பிரச்சினையில் இவர்கள் அனைவரும் இன்னமும் வேறு பாதையில் செல்கின்றனர். ஆதாரங்களின்படி, விரைவில் 350-க்கும் மேற்பட்டோர் PSA-இன் கீழ் வரலாம். PSA-இன் கீழ், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க முடியும் என்ற விதி உள்ளது.
ஜம்மு-காஷ்மீருடன் தொடர்புடைய ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், ஃபாரூக் அப்துல்லாவுக்குப் பிறகு, பலருக்கு எதிராக PSA-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்.
PSA சட்டம் ஃபாரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லாவால் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில், அரசாங்கம் இந்த சட்டத்தின் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டது. ஆனால் தற்போது சட்டத்தை கொண்டவந்தவர் மீதே பாய்கிறது.