ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பாராளுமன்றத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய 9 பேர்கள் கொண்ட குழுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அமைத்து உள்ளார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜனதா உறுப்பினர் கிரித் சோமையா தலைமையில் 9 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து உள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் அறிக்கையை சமர்பிக்க குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையே பகவந்த் மான் தனது விளக்கத்தை நாளை காலையில் குழுவிடம் சமிர்பிக்கவேண்டும் என்று கூறினார். குழுவின் முடிவு வரும்வரையில் அவை நடவடிக்கையில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று பகவந்த் மானை கேட்டுக் கொண்டார், அவரும் அவை நடவடிக்கையில் கலந்துக் கொள்ளவில்லை.
கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. பகவந்த் மான் பாராளுமன்றம் தொடர்பான 12 நிமிட விடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். வீடியோவில் வர்ணனையோடு அவர் காட்சிகளை விளக்குகிறார். அந்த விடியோவில், பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி தனது வாகனத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் அவர், "இதுவரை நீங்கள் பார்த்திராத விஷயங்களை உங்களுக்கு காண்பிக்கிறேன்'' என்கிறார். பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் அவைக்குச் சென்று, அலுவல்நடைமுறைகளை விளக்குகிறார். நாடாளுமன்றத்தில் எழுப்படும் கேள்விகள் அடங்கிய தாள்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று அங்கு நடைபெறும் நடவடிக்கைகளை விளக்கினார்.
இவ்விவகாரம் பாராளுமன்றத்திலும் பெரும் பிரச்சனையாக வெடித்தது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற வளாகத்தை விடியோவில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் ஒளிபரப்பிய ஆம் ஆத்மி கட்சி எம்.பி. பகவந்த் மானுக்கு எதிராக பாஜக கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வெள்ளியன்று சுமித்ரா மகாஜனை, அவரது அலுவலகத்துக்குச் சென்று சந்தித்த பகவந்த் மான், மன்னிப்புக் கடிதத்தை அளித்தார்.
தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதுடன், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து தெரியாமல், தவறு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார். அதை ஏற்க மறுத்த சுமித்ரா மகாஜன், இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏற்கெனவே, கடந்த 2001-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நாடாளுமன்றப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். எனவே, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதிபடத் தெரிவித்தார்.