மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் தடுப்பு மையங்களை அமைக்க தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று கூறியுள்ள நிலையில், தேசிய குடிமக்களின் பதிவு (NCR) மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அலிபூர்துர், கூச்ச்பெஹார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மறுஆய்வு நிர்வாகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “மாநில அரசின் சார்பாக, மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அறிமுகப்படுத்த எந்த திட்டமும் இல்லை” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
"தற்போது, பாஜக அரசு அங்கு(அசாமில்) ஆட்சியில் உள்ளது. ஆகவே, அவர்களால் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்த முடிந்தது. ஆனால் நம் மாநிலத்தில் அரசாங்கம் நம்முடையது, நாம் ஏற்கனவே NCR அமல்படுத்துவதை எதிர்க்கிறோம். தடுப்பு முகாம் குறித்து எந்த கேள்வியும் இல்லை ஏனெனில் நாங்கள் அதற்கு எதிராக இருக்கிறோம்,” என்று மம்தா குறிப்பிட்டார்.
டிசம்பர் 31, 2014-க்கு முன்னர் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட குடியுரிமை திருத்த மசோதாவை (CAB), தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும் பானர்ஜி வலியுறுத்தினார்.
"தேசிய குடிமக்கள் பதிவேடு உடன், நாங்கள் குடியுரிமை திருத்த மசோதாவையும் (CAB) எதிர்க்கிறோம். இது மதத்தின் அடிப்படையில் ஒருபோதும் சாத்தியமில்லை. யார் இந்தியர், யார் வெளிநாட்டவர் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை (திருத்த) மசோதா, 2016, ஜனவரி 8-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.