ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகல்காம் மற்றும் பல்தல் பாதைகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.
இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த புனித யாத்திரை நேற்று பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து துவங்கியது.
இந்த யாத்திரையின், முதல் குழுவை காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகல்காம் மற்றும் பல்தல் பாதைகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால், பாதயாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர், பாத யாத்திரை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான நிலையை உறுதி செய்த பின்னர் பனி லிங்கம் உருவாகும் புனித குகைக்குச் செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Visuals from Baltal after #AmarnathYatra was stalled due to heavy rainfall. #JammuAndKashmir pic.twitter.com/2GiTFIkXvP
— ANI (@ANI) June 28, 2018