தேர்தல் விதிகளை மீறிய யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் பேசிய மாயாவதி, முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள். இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
மறுமுனையில் ஏப்ரல் 9ம் தேதி பிரசாரப்பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பேசியிருந்தார்.
இந்நிலையில் 2017ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, சாதி மற்றும் மதத்தினை தேர்தல் பிரசாரங்களில் உபயோகிக்க தடை விதித்ததை அடுத்து தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் யோகி மற்றும் மாயாவதி பேசியதற்காக தேர்தல் ஆணையம் இவர்களை 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.