ஏழை மக்கள் அமைதியாக தூங்குகிறார்கள் - பிரதமர் மோடி

Last Updated : Nov 14, 2016, 01:59 PM IST
ஏழை மக்கள் அமைதியாக தூங்குகிறார்கள் - பிரதமர் மோடி title=

உத்தர பிரதேச மாநிலம் காசிபூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:- 

1965-ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய வீர் அப்துல் ஹமீதை ஈன்றெடுத்த காசிபூருக்கு எனது வணக்கம். 2014-ம் ஆண்டு மே மாதம் உங்களிடம் ஆதரவு கேட்பதற்காக இங்க வந்தேன். எனக்கு ஓட்டளித்தீர்கள். அது தான் உங்கள் ஓட்டின் வலிமை. தற்போது ஏழை மக்கள் அமைதியாக தூங்குகிறார்கள். ஆனால் சில செல்வந்தர்கள் தூக்கத்திற்கு மருந்தை தேடி அழைகிறார்கள். 

இன்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள். நேரு செய்ய நினைத்ததை அவருக்கு பின்னால் வந்தவர்கள் செய்யவில்லை. நேரு அவர்களே! உங்கள் குடும்பத்தினரும், உங்கள் கட்சியும் எங்களை ஏமாற்றி விட்டனர். உங்கள் ஆட்சியில் செய்யாமல் விட்டதை நிறைவேற்றுவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். 

உத்தர பிரதேசம் நாட்டுக்கு பல பிரதமர்களை கொடுத்துள்ளது. இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9_வது பிரதமர் நான். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு மக்களின் வாக்குகள் உதவின. நான் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்ற நினைக்கிறேன். ஏழை, எளிய மக்களின் தியாகங்கள் வீணாகாது. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஊழல்வாதிகள் கவலையில் உள்ளனர். இது ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கான அரசு. இந்தியாவில் பணத்திற்கு பஞ்சமில்லை. எவ்வளவு பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளாதது தான் பிரச்னை. இப்படி நிறைய காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது ஏமாற்றுபவர்களுக்கும், முறைகேடு செய்பவர்களுக்கும் இடமில்லை. ஒவ்வொருவரின் நன்மைக்காகவும் தான் ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 

நீங்கள் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். ரூபாய் நோட்டை வாபஸ் பெற்றதால் நீங்கள் படும் சிரமங்களையும் நான் அறிவேன். புதிதாக ஒன்றை துவங்கும் போது எப்போதும் சில கடினங்கள் இருக்கத்தான் செய்யும், ஆனால் இதன் நோக்கம் சரியானது. எங்களின் நடவடிக்கையால் சிலரை மட்டுமே மிகவும் வலியை ஏற்படுத்தி உள்ளது. சாமானிய மனிதனை அல்ல. ஏழை மக்கள் ஏற்பார்கள், பணக்காரர்கள் இதனை எதிர்ப்பார்கள் என எனக்கு தெரியும். நமது அண்டை நாடுகள் கள்ள நோட்டுக்களை பரப்பி வருகின்றன. இந்த கள்ள நோட்டுக்களின் வெள்ளத்தில் நமது நாட்டையே மூழ்கடிக்க நினைக்கிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். 

ரூ.500, 1000 நோட்டுக்களை தடை செய்யாவிட்டால் கள்ள நோட்டை தடை செய்ய முடியாது. எல்லை வழியாக கள்ளநோட்டுக்களை அச்சடித்து அனுப்புபவர்கள் தான் நமது எதிரிகள். எதிர்க்கட்சிகளால் இதனை புரிந்து கொள்ள முடியவில்லை. ரூ.2.50 லட்சம் டெபாசிட் செய்த பெண்களை வருமான வரித்துறை கேள்வி கேட்காது. ஆனால் ரூ.2.50 கோடி டெபாசிட் செய்தவர்களை கேள்வி கேட்போம். ஏழை மக்களின் பணத்தை யாரும் கொள்ளையடிக்க நான் ஒருபோதும் விடமாட்டேன். என்னை எதிர்ப்பவர்கள் வலிமையானவர்கள் என எனக்கு தெரியும். அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை. உண்மை மற்றும் நேர்மையின் பாதையை விட்டு நான் விலகப் போதில்லை. 

வளர்ச்சியின் புதிய யுகம் துவங்கி உள்ளது. நான் ஒவ்வொருக்கும் வாய்ப்பு தருவேன். மக்களை காப்பதற்கு நான் எந்த எல்லைக்கும் செல்வேன். தற்போது உங்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என மோடி கூறியுள்ளார்.

Trending News