டெல்லி: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை மேற்கு வங்க அரசுக்கு 48 மணி நேரத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களின் முறையாக கண்காணிக்காதது தான் காரணம் எனக்கூறிய இறந்த நோயாளியின் உறவினர்கள் ஒன்றாக சேர்ந்து மருத்துவர்களை சரமாரியாகத் தாக்கினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், பணியில் இருந்த மருத்துவர் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதவாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் தொடங்கிய டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் நீதி வேண்டும் என்ற கோசத்துடன் மருத்துவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்புக் கோர வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை மருத்துவர்கள் முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர். எங்கள் கோரிக்கையை ஏற்று மம்தா பானர்ஜி 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கா விட்டால், நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போரட்டம் நடந்தப் போவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.