ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளி புகையில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ 5 டிப்ஸ்!

ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீபாவளி புகை ஒற்றுக்கொள்ளாது. அவர்கள் இந்த நாளில் இருந்து தப்பிப்பது எப்படி?

Written by - Yuvashree | Last Updated : Nov 11, 2023, 06:17 PM IST
  • தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் பலருக்கு தொல்லை.
  • சுவாசக்கோளாறு உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுவர்.
  • இதை சமாளிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
ஆஸ்துமா நோயாளிகள் தீபாவளி புகையில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ 5 டிப்ஸ்! title=

தீபாவளி பண்டிகையையும் பட்டாசு கொளுத்துவதையும் பிரிக்கவே முடியாது. இதில், பெரிதும் அவதிப்படுபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்படுபவர்கள்தான். இந்த சுவாச நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு நேரடியாக நுரையீரல் பாதிக்கும். இவர்களில் பலர், மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுவர். தீபாவளியன்று தெருக்களில் வெடிக்கப்படும் பட்டாசு புகைகள், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை தாண்டி அவர்களை பாடாய் படுத்தி எடுத்து விடும். அப்படி, புகையால் பாதிக்கப்படுபவர்கள் இந்த தீபாவளிக்கு பட்டாசு புகையில் இருந்து எப்படி தப்பிக்கலாம்? இதோ சில டிப்ஸ். 

1.வீட்டில் இருப்பது நலம்:

தீபாவளி சமயத்தில் பெருமாலும் வெளியில் செல்வதை தவிர்க்கவும். சாதாரணமாக வீட்டில் சமைக்கையில் தாளிக்கும் புகையே பலருக்கு ஒற்றுக்கொள்ளாது. அப்படி இருக்கையில் பட்டாசு புகை அவர்களை என்னென்ன செய்யும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆஸ்துமாவை தூண்டி விடும் வகையிலான பட்டாசு புகையில் இருந்து சுவாச நோய் உள்ளவர்கள் எப்போதும் தள்ளியிருப்பதே நல்லது. ஜன்னல் கதவுகளை மூடி விட்டு வீட்டிலேயே இருப்பதால் ஆஸ்துமா அட்டாக் ஆவதில் இருந்து தப்பிக்கலாம். அப்படி, அதையும் மீறி வெளியில் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் முகத்தில் மாஸ்க் அணிவதோ அல்லது கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொள்வதோ கட்டாயம். குறிப்பாக இரவில் அல்லது மாலை வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்கவும். ஏனென்றால் அப்போதுதான் பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்படும். 

2.இன்ஹேலரை கூடவே வைத்துக்கொள்ளுங்கள்:

இன்ஹேலர் உபயோகிக்கும் அளவிற்கு ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவராக இருந்தீர்கள் என்றால், அதை உங்களுடனே எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர் எந்த மருந்துகளை உங்களுக்காக எழுதி கொடுத்திருக்கிறாரோ அந்த மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். தீபாவளி சமயத்தில் ஏற்படும் புகையால் ஆஸ்துமா நோய் அதிகமாகவும் வாய்ப்புள்ளது. அதனால், இன்ஹேலரை கூடவெ வைத்துக்கொள்வது நல்லது. 

மேலும் படிக்க | வேகமாக தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் வெயிட் லாஸ் மேஜிக் காம்போ!!

3.மது அருந்துவதை தவிர்க்கவும்:

வைன், பீர் போன்ற மது வகைகளை எப்போதும் தவிர்ப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம். குறிப்பாக தீபாவளி சமயங்களில் மது அருந்துவது உங்களது சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடும். ஆதலால் மது வகைகளை உங்கள் உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பது அவசியம்.

4.தூசியில் இருந்து தள்ளியே இருங்கள்!

தீபாவளிக்கு முன் மக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்வதை அனைவரும் வழக்கமாக கொண்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அப்படி சுத்தம் செய்கையில் தூசிகளை கிளறி, சுற்றியுள்ள காற்றில் அவற்றை பரவ விட வாய்ப்புள்ளது. இத்தகைய தூசி துகள்களால் சுவாச கோளாறு உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். இது, ஆஸ்துமா தாக்குதலுக்கும், தும்மல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும். அதனால், வீட்டை சுத்தம் செய்யும் போது தூசிகளிடம் இருந்து தள்ளியே இருப்பது நல்லது. 

5.சாப்பாட்டில் கவனம் தேவை:

தீபாவளி சமயத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் வரைமுறையே இருக்காது. பலர் இனிப்பு காரம் என எதையும் பார்க்காமல் தொடர்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டே இருப்பர். ஆஸ்துமா நோயாளிகள் அதிகளவில் இனிப்பான உணவுகளை எடுத்துக்கொள்வதால் இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே தீபாவளி சமயத்தில் காய்கறி, பழங்கள் போன்ற ஹெல்தியான உணவுகளை பேணுவது மிகவும் நல்லது.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News