கொழும்பு: உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் உள்ள விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்திய அரசு எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. யாத்ரீகர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களுக்கு புத்த தளங்களை ஆராயும் வாய்ப்பை இந்த முயற்சி ஏற்படுத்தும் வழங்கும் என்று இந்திய ஹை கமிஷன் தெரிவித்துள்ளது.
ஜூன் 24 ம் தேதி இந்திய அரசு ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முக்கியமான பெளத்த யாத்திரைத் தளங்களுடன் மேம்பட்ட இணைப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
இலங்கையில் பெளத்தர்கள் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
"குஷிநகர் மாவட்டத்தில் பெருமளவிலான புத்த மடங்களும், பெளத்த கலாச்சார தளங்களும் உள்ளது. குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் முடிவு, பெளத்த யாத்ரீகர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். அதுமட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லும்பினி, கபிலவஸ்து மற்றும் ஸ்ராவஸ்தி போன்ற பிற முக்கிய தளங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கும்" என அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read Also | திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் முடி காணிக்கையின் மதிப்பு என்ன? தெரியுமா?
பொதுவாக தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், பர்மா போன்ற நாடுகளில் இருந்து தினசரி 200 முதல் 300 பக்தர்கள் குஷிநகருக்கு வந்து, பெளத்த மத தலங்களில் வழிபடுகின்றனர். ஆனால், இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நேரடி விமான வசதி இல்லாமல் இருந்தது. எனவே, குஷிநகரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பெளத்த மதத்தின் நான்கு முக்கிய யாத்திரைத் தலங்களில் ஒன்றாக குஷிநகர் கருதப்படுகிறது. கௌதம புத்தர் இறந்த பிறகு இங்கு தான் மகாபரிநிர்வாணம் (Mahaparinirvana) என்ற நிலையை அடைந்தார். எனவே, உலகெங்கிலும் உள்ள பௌத்த யாத்ரீகர்கள் வரும் தரும் மிகவும் புனிதமான புத்த யாத்திரை மையமாக இது கருதப்படுகிறது.
முகுத்பந்தன் சைத்யா என்றும் அழைக்கப்படும் ராமபார் ஸ்தூபம், புத்தரின் தகன இடமாகக் கூறப்படுகிறது, இது மகாபரிநிர்வாணா கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
குஷிநகரில் இருக்கும் மகாபரிநிர்வாணா கோவிலில் ஆறடி நீளத்தில் புத்தர் படுத்த நிலையில் காட்சியளிக்கிறார். இந்த சிலை 1876ஆம் ஆண்டு தோண்டியெடுக்கப் பட்டது. இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் குஷிநகர் அருங்காட்சியாத்தில் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமான பௌத்த மத புனிதத் தலமாக இருப்பதால், உலகம் முழுவதுமிருந்து இங்கு வரும் பக்தர்கள் இங்கே தங்கியிருந்து பௌத்த மத நம்பிக்கைகளைப் பற்றிய படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.