முதலமைச்சராக இருக்கும்போது பிரதமர் மோடி என்ன பேசினார்?
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசின் பாரபட்சத்துக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி என்ன பேசினார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி என்ன பேசினார்? என்ற வீடியோவும் இப்போது திமுக எம்பி கனிமொழி பகிர்ந்துள்ளார்.
அதில் "ஒவ்வொரு ஆண்டும் குஜராத் மாநிலம், மத்திய அரசுக்கு ரூ. 60,000 கோடியை வரியாக கொடுக்கிறது. அதற்கு ஈடாக மத்திய அரசு என்ன திரும்பத் தருகிறது? 8,000 கோடி, பத்தாயிரம் கோடி.
நாங்கள் திருப்பிக் கொடுக்கிறோம், போதுமான நிதியை திருப்பிக் கொடுக்கிறோம் என்கிறது மத்திய அரசு. நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா?" என ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.
மேலும், பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது பதிவிட்ட ட்வீட்களும் தற்போது பகிரப்பட்டு வருகின்றன. கடந்த 2012ஆம் ஆண்டு மோடி பதிவிட்ட ட்விட்களில், "குஜராத் மக்கள் 60,000 கோடியை அனுப்புகிறார்கள், அதற்கு ஈடாக என்ன திரும்ப வருகிறது?
குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா? நாங்கள் பிச்சைக்காரர்களா?, டெல்லியின் தயவில் வாழ்கிறோமா? பிரதமரின் மொழி அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல" என்றெல்லாம் கடுமையாக பேசியிருக்கிறார்.
அப்படி பேசிய பிரதமர் மோடி, இப்போது மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் இவ்வளவு பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இப்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், சித்தராமையா, பினராயி விஜயன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.