உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா யார்?
இந்திய உச்சந்தீமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா. டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு வயது 64.
சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கலந்து கொண்டனர்.
புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இருக்கும் சஞ்சீவ் கண்ணாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சுமார் 6 மாத காலம் இவருக்கு பதவிக்காலம் இருக்கிறது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இல்லாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ஒருசிலரில் இவரும் ஒருவர்.
நீதிபதி ஹெச். ஆர்.கண்ணாவின் நெருங்கிய உறவினர் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. 1983 இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2005 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியானார் சஞ்சீவ் கண்ணா. அடுத்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு முழுநேர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவதூறாக பேசிய பத்திரிக்கையாளருக்கு எதிரான எப்ஐஆர்-ஐ ரத்து செய்ய மறுத்தவர். சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுள் ஒருவராக இருந்தார்.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தல், 2018 தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை நிறுத்துதல் உட்பட பல அரசியலமைப்பு பெஞ்ச் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இருந்தார்.