ஒரு தேர்தலில் 3 பிரதமர்கள்! 1996-ல் என்ன நடந்தது?
1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 161 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 140 இடங்கள் மட்டுமே கிடைத்து.
ஜனதா தளம் 46 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களிலும் வென்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக, தமிழ்மாநில காங்கிரஸ், சிபிஐ கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.
இதில் திமுக 12 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 20 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும் என 39 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக காங்கிரஸ் கட்சிகள் அனைத்து இடங்களிலும் தோல்வி
தனிப்பெரும் கட்சியான பாஜகவை முறைப்படி ஆட்சி அமைக்க அழைத்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, 2 வாரங்களில் நாடாளுமன்றத்தில் பெருமான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.
இதன்படி 1996 மே மாதம் 15ஆம் தேதி பிரதமர் ஆக அடல் பிகாரி வாஜ்பாய் பதவி ஏற்றார். மாநிலக் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக பெரும் முயற்சி செய்ததது. இருப்பினும் அது கைக்கொடுக்கவில்லை.
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை வாஜ்பாய் பெறத் தவறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே வாஜ்பாய் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க மறுத்தது. ஜனதா கட்சி தலைவராக இருந்த விபி சிங் பிரதமர் ஆவதை விரும்பவில்லை.
இதனால் ஜனதாதள கட்சி தலைவரும், கர்நாடக முதலமைச்சராகவும் இருந்த ஹெச்.டி.தேவகவுடா பிரதமர் ஆனார். அவருக்கு திமுக, தமாக கட்சிகள் ஆதரவு அளித்தன. அமைச்சரவையில் பங்கேற்காமல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.
இருப்பினும் தேவகவுடா அரசுக்கு காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் 324 நாட்கள் பிரதமர் ஆக இருந்த தேவகவுடா பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக பொறுப்பேற்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி திமுகவை அமைச்சரவையில் இருந்து விலக்க கோரி காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்தது.
இதனை ஏற்க மறுத்த ஐ.கே.குஜ்ரால் 332 நாட்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 1998ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் கட்டாயத்திற்கு ஆளானது.