உணவுகள் மூலம் இயற்கையாக வைட்டமின்களை உட்கொள்ளும் போது, அதிக அளவில் சாப்பிட்டாலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் செறிவூட்டப்பட்ட அளவை சப்ளிமெண்ட்ஸ் அதாவது மாத்திரைகள் வடிவில் உட்கொள்ளும்போது, அதிகப்படியான அளவினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிகப்படியான விட்டமின் ஏ (Vitamin A) மாத்திரைகள் காரணமாக, நச்சுத்தன்மை, அல்லது ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ ஆகியவை ஏற்படலாம். இதற்கான அறிகுறிகளில் வாந்தி, அதிகரித்த உள்விழி அழுத்தம் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் B3 (Vitamin B3) நியாசின் என்றும் அழைக்கப்படுகிறது. நியாசின் தினமும் 1-3 கிராம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அதிக ரத்த அழுத்தம், வயிற்று வலி, பார்வை இழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி6 (Vitamin B6) என்ற பைரிடாக்சினை நீண்ட காலத்திற்கு அதிக அளவில் எடுத்துக் கொள்வது, கடுமையான நரம்பியல் அறிகுறிகள், தோல் புண்கள், ஒளியின் உணர்திறன் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
வைட்டமின் B9 (Vitamin B9), ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது; அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டால் மன ஆரோக்கியத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும்.
வைட்டமின் பி 12 ( Vitamin B12) ஐ அதிக அளவில் எடுத்துக் கொண்டாலும், அது சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேறும். இருப்பினும், தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும்.
வைட்டமின் சி (Vitamin C) மற்ற ஊட்டச்சத்துக்களை விட குறைவான நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது, வயிற்றுப்போக்கு, வாந்தி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் டி (Vitamin D) சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான நச்சுத்தன்மை எடை இழப்பு, பசியின்மை மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகரித்தல் உள்ளிட்டபாதிப்புகள் ஏற்படும். இது இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும்.
அதிகப்படியான வைட்டமின் ஈ (Vitamin E) சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டால், அது இரத்தம் உறைதல், ரத்தக்கசிவு மற்றும் ஹெமோர்ஹாஅஜிக் ஸ்ட்ரோக் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் கே (Vitamin K) அதிகமாக இருந்தால், நச்சுத்தன்மை எற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் இது வார்ஃபரின் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற சில மருந்துகளுடன் சேர்ந்தால் எதிர் வினை புரியலாம்.