இந்த 10 கார்களுக்கெல்லாம் மவுசே இல்லை..!
மக்கள் நிராகரித்த 10 கார்கள் எவையெல்லாம் என்ற பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்
ஹேட்ச்பேக் மாடலில் வந்த இந்த A-ஸ்டார் காரை 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மாருதி சுசூகி நிறுவனம். இந்தக் காரை அல்டோ 800-வை கொஞ்சம் ப்ரீமியம் வகை கார் என்று சொல்லலாம். 2 ஏர் பேக்ஸ், ஏபிஎஸ், ஈபிடி என பல பாதுகாப்பு அம்சங்கள் இந்தக் காரில் இடம் பெற்றிருந்தன. எனினும் வாடிக்கையாளர்களிடத்தில் போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தால் 2013-ம் ஆண்டு முதல் ஏ-ஸ்டார் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மைக்ரோ ஹேட்ச் மாடல் கொண்ட இயான் காரை 2011-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இந்தக் காரின் உற்பத்திக்காக மட்டுமே ரூ.900 கோடி வரை செலவு செய்திருந்தது ஹூண்டாய். ஆனால் அந்த சமயத்தில் மக்களிடம் ஆல்டோ 800 கார் அதிக வரவேற்பு பெற்றிருந்ததால் இது போதிய வரவேற்பை பெறவில்லை.
ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 வரைக்குள்ளாக ப்ரீமியம் வகை கார்கள் விற்பனையில் நுழைந்த மாருதி, முதன் முதலாக S-க்ராஸ் காரை அறிமுகப்படுத்தியது. சிறந்த பெர்ஃபார்மன்ஸ் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பமான காராக இருந்தாலும், பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்தக் கார் பிடித்தமானதாக இல்லை. இதன் காரணமாக 2022-ம் ஆண்டு முதல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சான்ட்ரோ கார்கள் மக்களிடம் அதிகம் பிரபலமடைந்த்தால், அதன் மூன்றாம் தலைமுறை காரை 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது ஹூண்டாய் நிறுவனம். ஆனால் அந்த சமயத்தில் இந்தியர்கள் SUV கார்களை விரும்பத் தொடங்கிவிட்டனர். இதனால் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 2022 இந்தக் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.
2004-ம் ஆண்டு இண்டிகோ மரினாவை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். ஆனால் இந்தியர்களுக்கு இதன் தோற்றமும் வடிவமைப்பும் சுத்தமாக பிடிக்கவில்லை. இதன் காரணமாக 2010-ம் ஆண்டு இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஸ்டேஷன் வேகன் மாடல் கார்களில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என நினைத்த மாருதி, பலேனோ அல்டுராவை அறிமுகப்படுத்தியது. ஆனால் பலேனோ செடான் வகை கார் வெற்றியடைந்தது போல் இந்த காரால் முடியவில்லை. 2007-ம் ஆண்டு இந்தக் கார் நிறுத்தப்பட்டது.
இன்று பிக்கப் டிரக்குகள் பிரபலமாக அறியப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் இதேப் போன்ற வரவேற்பு இருந்தது என்று சொல்ல முடியாது. 2012-ம் ஆண்டு ஜெனான் என்ற லைஃப்ஸ்டைல் பிக்கப் டிரக்கை அறிமுகப்படுத்தியது டாடா. ஆனால் மோசமான தரம் மற்றும் மந்தமான விற்பனை காரணமாக 2017-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
2010-ம் ஆண்டு ஒரு உலகளாவிய தயாரிப்பை சாண்டா Fe SUV காரின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இதன் விலை ரூ.20 லட்சமாகும். எனினும், இவ்வுளவு அதிகமான விலை கொண்ட காரை அந்த சமயத்தில் இந்தியாவில் வாங்க யாரும் தயாராக இல்லை. இதனால் 2017-ம் ஆண்டு இதன் விற்பனை நிறுத்தப்பட்டது.
முதல் தலைமுறை இன்னோவா காரிலிருந்துதான் இந்தியாவில் MPV கார்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கு போட்டியாக ஐரியாவை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். ஆனால் மக்களிடம் இந்தக் காருக்கு வரவேற்பே இல்லை. பின்னர் இதைக்கொஞ்சம் மேம்படுத்தி ஹெக்ஸா என வெளியிட்டார்கள். அதுவும் தோல்வியடைந்ததால், இதன் விற்பனையை 2017-ம் ஆண்டு முதல் முற்றிலும் நிறுத்திவிட்டனர்.
தோல்வியடைந்த கார்களின் பட்டியலில் இப்போதும் விற்பனையில் இருக்கும் கார் என்றால், அது S-ப்ரெஸ்ஸோ மட்டுமே. 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட S-ப்ரெஸ்ஸோ, ஆல்டோவிற்கு மாற்றான ஒரு SUV வகை காராக பார்க்கப்பட்டது. ஆனால் விற்பனை என்னவோ இன்று வரை மந்தமாகவே இருக்கிறது. ஒருவேளை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இதன் விற்பனை அதிகரிக்குமா அல்லது ஓட்டுமொத்தமாக சந்தையிலிருந்து வெளியேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.