அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் இனி திமுக-வில் இணைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனியில் இன்று அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ் மொழிக்கு எந்த சூழலிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது. மாற்று கட்சியினர் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்துள்ளார்கள்.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் அன்போடு பழகக்கூடிய தங்கதமிழ்ச்செல்வன் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார். தங்கதமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம். ஆனால் நடக்கவில்லை. தற்போது நடந்துவிட்டது’ என தெரிவித்தார்.
மேலும், ‘அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. திமுக முறையாக தேர்தலை சந்தித்து 200 தொகுதியில் வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சியில் அமரும். முதல்வர் கூறுவது போல் மிட்டாய் தந்து வெற்றி பெறவில்லை; மக்களின் நம்பிக்கையால் வெற்றி பெறுவோம்.
கருணாநிதி, ஜெயலலிதாவும் முதல்வராக இருந்தவரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை. குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி நீட் தேர்வை எதிர்த்தார்’
நான்கு நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் டாக்டர் சரவணன் தனது கன்னிப் பேச்சை பேசினார். அப்படி பேசுகையில்., கலைஞர் அவர்களுக்கு நன்றி கூறினார். அப்போது அமைதியாக இருந்த அ.தி.மு.க-வினரை பார்த்து கலைஞர் தி.மு.க.,விற்கு மட்டும் தலைவராக இருந்தவர் அல்ல; உங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கே தலைவராக இருந்தவர் என பெருமையுடன் கூறியதைக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று தனது 14வது வயதில், சக மாணவர்களுடன் போராடியவர் தலைவர் கலைஞர் எனவும் பெருமை தெரிவித்தார். தொடர்ந்து தமிழ் மொழிக்கு எந்த நிலையிலும் ஆபத்து வந்துவிடக்கூடாது, ஆனால் அந்த சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
தற்போது உள்ள அ.தி.மு.க எம்.ஜி.ஆர் உருக்கியதா? அப்படி அவர் உருவாக்கிய அ.தி.மு.க.,வாக இருந்தால் தங்க தமிழ்செல்வன் இங்கே வந்து இணையவேண்டிய தேவை இருந்திருக்காது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.கவில் உள்ள அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்திற்காக நடத்தியுள்ளனர். மேலும் பல கோடி அளவில் மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.
பதவி பறிபோனததால் தான் ஜெயலலிதா சாவில் மர்ம உள்ளது என ஒரு பிரச்சனையை ஓ.பி.எஸ் கிளப்பினார். அதனால் தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் ஒரு முறைகூட விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் மோடியும், அமித்ஷாவையும் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் தலைமையில் இன்று ஆட்சி நடைபெறுகிறது. மோடி, அமித்ஷாவுக்கு அண்ணாவையோ, எம்.ஜி.ஆர் அவர்களையோ தெரியுமா? பணத்திற்காக, அதிகாரத்திற்காக இவர்கள் கூனிக்குறுகி பா.ஜ.க பக்கம் நிற்கிறார்கள்.
அதுமட்டுமின்றி தி.மு.க மீது பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் பேசி வருகிறார். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதியில் பொய்யான மிட்டாய் கொடுத்துள்ளது என முதல்வர் பேசுகிறார். அப்படியென்றால் அ.தி.மு.க வெற்றி பெற்ற ஒரு இடத்தில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி அடைந்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.