முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்..!

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 6, 2022, 07:38 PM IST
  • பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் தகனம்
  • மகாராஷ்டிரா அரசின் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
  • பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்..! title=

இந்தியாவின் பழம்பெரும் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி உள்ளிட்ட பலரும் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்திய திரையுலக பிரபலங்களும் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என மகாராஷ்டிரா அறிவித்தது. மத்திய அரசு சார்பில் 2 நாள் நாடு முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா வந்தடைந்தார். அவரை மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ், மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்ரே, கோவா முதலமைச்சர் பிரமோத் சவான் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். இதனையடுத்து, மகாராஷ்டிரா அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து மும்பை சிவாஜி பார்க்கில் மகாராஷ்டிரா அரசின் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  சச்சின் தெண்டுல்கர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோரும்  லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News