கொரோனா வைரஸ்: அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளில் இந்தியா

உலகில் கொரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

Last Updated : Jan 30, 2020, 10:46 AM IST
கொரோனா வைரஸ்: அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளில் இந்தியா title=

உலகில் கொரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 

வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சீன அரசு மக்கள் கூட்டமாக கூடுவதையும், கூட்டமாக பயணம் செய்வதையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு ஒரு விமானத்தை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை விமானத்தில் ஏற்றிச்செல்ல இந்தியாவின் கோரிக்கையை  சீனா ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உலகில் கொரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக ஆய்வுகள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தின் சவுத்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், விமானம் மூலம் அதிக பயணிகள் வரும் நாடுகளின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து, கொரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 23வது இடத்தில் இந்தியா உள்ளது. முதல் இடத்தில் தாய்லாந்தும், 2வது இடத்தில் ஜப்பானும், 3வது இடத்தில் ஹாங்காங்கும் உள்ளன.

Trending News