முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வகித்த பதவிகள்!
ராஜ்யசபா எம்பியாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்தது
இந்தியாவில் தாராளமயமாக்கலை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங். 1991-ம் ஆண்டு இந்தியாவில் தரளமயமாக்கல் கொள்கை அறிமுகமானது. 1991-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது நிதி அமைச்சராக பதவி வகித்த மன்மோகன் சிங்தான் இதனை நடைமுறைப்படுத்தினார்.
அப்போது 1991 அக்டோபரில் முதல் முறையாக ராஜ்யசபா எம்பியானார் மன்மோகன் சிங். 1991-1996-ல் நாட்டின் நிதி அமைச்சராகவும் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார் மன்மோகன் சிங்.
1991-ம் ஆண்டு முதல் 33 ஆண்டுகளும் ராஜ்யசபா எம்பியாக மட்டுமே மன்மோகன் சிங் பதவி வகித்தார். மன்மோகன் சிங்கின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்தது. மன்மோகன் சிங்குக்கு தற்போது 91 வயது என்பதால் மீண்டும் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி தரப்படவில்லை.
மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932ல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 1948ல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார்.
அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரை பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் 1957ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து 1962ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில். பட்டத்தைப் பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங்கின் சிறந்த கல்வி அறிவு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பெருமைமிக்க டெல்லி பொருளாதாரப் பள்ளியில் கல்வி நிபுணராக இருக்க உதவியது.
இந்த காலத்தில் அவர் யூஎன்சிடிஏடி (UNCTAD) செயலகத்திலும் குறுகிய காலம் பணியாற்றினார். இதனால் 1987 மற்றும் 1990ம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சவுத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
1971ல், டாக்டர் மன்மோகன் சிங் சிங் இந்திய அரசில் இணைந்தார். வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மிக விரைவிலேயே, 1972ல், அவர் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசில், மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்னவென்றால், 1991 முதல் 1996 வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியில் டாக்டர் மன்மோகன் சிங் இருந்ததுதான். அப்போது அவர் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன.